Saturday, July 28, 2007


குடியரசு துணைத் தலைவராகிறார் கல்வியாளர் ஹமீத் அன்சாரி
அபூசாலிஹ்


இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலை வராகும் வாய்ப்பு கல்வியாள ரும், மனித உரிமை ஆர்வல ருமான முஹம்மத் ஹமீத் அன்சாரிக்கு வாய்த்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எம்.ஹெச். அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருபவர்.
இவரது பெயரை 20.07.2007 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவி சோனியா காந்தி முறைப்படி அறிவித்தார்.
இவர் ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஈரான், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் தூதராக பணியாற்றி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினராகவும் பணியாற்றிய எம்.ஹெச். அன்சாரி சிறந்த கல்விமான் ஆவார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடமை யாற்றியவர். 1984 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
வளைகுடா நாடுகளின் அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்த அன்சாரி, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மனப்பாங்கு கொண்டவர்.
முன்னணி ஆங்கில நாளேடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பு கொள்கை களை சரமாரியாக விளாசித் தள்ளியவர்.
சிறந்த நூல்களை படைத்த அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய போது மனித உரிமைகளை பேணுவதில் பேரார்வம் கொண்டவராக விளங்கினார்.
குஜராத் கோர கலவரத்தில் குதறப் பட்ட மக்களின் பால் அன்பு காட்டிய அன்சாரி 1984ல் நிகழ்ந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினார்.
கல்வியாளர், மனித உரிமை ஆர்வலர் என பல்வேறு சிறப்புகளை உடைய அன்சாரியை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவித் ததின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட் பாளர் அறிவிப்பில் காங்கி ரஸ் கூட்டணி செய்த குளறுபடிகளை சரி செய்து விட்டதாகத் தெரிகிறது.
மக்களின் குடியரசுத் தலைவராக புகழப்பட்ட அவுல் பக்கீர் ஜெயினுலாப் தீன் அப்துல் கலாம் தமது பொறுப்பிலிருந்து விடை பெறும் நேரத்தில், இஸ்லா மிய சமுதாயத்தை சேர்ந்த மற்றொரு மக்கள் அறிஞர் குடியரசுத் துணைத் தலைவ ராக அறிவிக்கப்பட இருப் பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மூன்றாவது அணியின் சார்பில் ரசீத் மசூத் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டி ருக்கிறார். பாஜக அணியின் சார்பில் மவ்லானா அபுல் கலாம் ஆசாத்தின் பேத்தியும் முன்னாள் ராஜ்ய சபைத் துணைத் தலைவருமான டாக்டர். நஜ்மா ஹெப்துல்லாஹ் போட்டியிடுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்ட பாரம்பரியத்தில் பிறந்தவர்கள். நஜ்மா ஹெப்துல்லாஹ் ஹமித் அன்சாரி இருவரும் ஆவார். காங்கிரஸின் செல்வாக்கு மிகுந்தவராய் திகழ்ந்த நஜ்மா இடையில் ஆட்சியில் அமர்ந்த பாஜகவின் வலையில் வீழ்ந்தார்.
ஊசலாட்ட மனநிலையில் உள்ள நஜ்மா தனது அரசியல் வாழ்வின் முதிர்நிலையை இழந்தார்.
இடைக்கட்ட காலத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவியிராவிட்டால் இன்று இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக ஏகோபித்த ஆதரவுடன் பதவி ஏற்றிருக்கக் கூடும். கொடுக்க வேண்டிய கடனை கொடுக்க மனமில்லாதவன் வழிப்பறிக் கொள்ளை யன் கொள்ளையடிக்க வரும் போது தான் கொடுக்க வேண்டிய கடனை தனக்கு முன்பு உதவியவருக்கு இதோ உனக்கு சேர வேண்டிய கடனை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி விடுவதைப் போல ஜெயிக்கவே முடியாத ஒரு பதவிக்கு பாஜகவினர் முஸ்லிம் ஒருவரை நிறுத்தி இருப்பது ஒரு தேர்ந்த நகைச்சுவை காட்சியாக பார்க்கப்படுகிறது.
மொத்ததில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கோட்டை விட்ட அரசியல் சாதுர்யத்தை துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸும் இடதுசாரிகளும் மீட்டுவிட்டனர்.
அறிஞரும் கல்வியாளரும் ஹமீத் அன்சாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணைத் தலைவராக விஜயம் செய்தார். அப்போது ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மற்றும் சச்சார் குழு பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்தது.
சமீபகால பள்ளிவாசல்களில் மீதான குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து சிறுபான்மை நேரடியாக தலையிட்டு துல்லிய விசாரணைகளை மேற்க் கொள்ள வேண்டும் என்றும் தமுமுக வேண்டுகோள் விடுத்தது. அதைக் கனிவோடு செவிமடுத்த அன்சாரி தற்போது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். கல்வியாளர், மனித உரிமையாளர் அன்சாரியை பாராட்டி வரவேற்கிற்கிறோம்

Thursday, July 19, 2007

அப்பாவிகளின் ரத்தத்தால் சிவந்த சிவப்பு மஸ்ஜித்



பாகிஸ்தானின் புகழ்பெற்ற லால் மஸ்ஜிதில் பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்
. அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித்.
இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.

இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின் இந்த முதிர்ச்சியற்ற வெறி நடவடிக்கை அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்

Sunday, July 15, 2007

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு!

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு
!14 நாட்களுக்குப் பிறகு திடிர் குற்றச்சாட்டை சுமத்தியது. அவரை எதிர்பார்த்து மனைவியும் பெற்றோரும் ஏமாற்றம்
.இது ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சி.ஜே.ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் நிகழ்ந்த வாகன குண்டு வெடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிடிக்கப்பட்டு விசாரிக்கப் பட்டு வரும் ஹனீஃப் மீது ஆரம்பம் முதலே எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. சம்பிரதாயப் பூர்வமான விசாரணை மட்டுமே இது என ஆஸ்திரேலிய நிர்வாகம் நேற்று அதிகாலை வரை அறிவித்து வந்தது.
ஆஸ்திரேலியக் காவல்துறையின் சாதாரண அதிகாரி முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு வரை ஹனீஃப் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று கூறினர். பெங்களூர் காவல்துறையும் ஹனீஃபின் வீட்டில் எந்த தடயமும் கிடைக்க வில்லை என்று ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
பத்திரிகைகளில் ஹனீஃப் இன்று விடுவிக்கப் படுவர். நாளை விடுவிக்கப்படுவார் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சனிக்கிழமை (14.07.07) முஹம்மது ஹனீஃப் மீது திடீரென குற்றச்சாட்டு ஒன்றை ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கஃபிலின் சகோதரர் சபீலுக்கு சிம் கார்டு கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் சி.ஜே.ராவ் தெரிவித்திருக்கிறார்.
திறமை வாய்ந்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தினால் ஹனீஃபை காப்பாற்றும் வாய்ப்பு உள்ளது என்றும் சி.ஜே. ராவ் தெரிவித்துள்ளார்.
27 வயதான ஹனீஃப் அண்மையில் தனக்கு பிறந்த பெண் குழந்தையை முதன் முதலாக தற்போது தான் பார்க்கப் போகிறார் என ஏக்கத்துடன் காத்திருந்த அவரது மனைவி பிர்தவ்ஸ் அர்ஷியா சோகத்தில் மூழ்கினார். ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும் என்றார். சிம் கார்டு ஒருவருக்கு கொடுப்பதாலே யாரும் குற்றவாளியாக மாட்டார்கள் என்றும் ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்தார்.
சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஹனீஃபை விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
கஃபில் மட்டுமே சம்பவத்துக்கு தொடர்புடையவர் ஹனீஃபுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்திய புலனாய்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

Wednesday, July 11, 2007

தூய உள்ளங்களுக்கு ஓர் ஒத்தடம்


200பேரை ப்லி கொண்ட அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது.ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..மும்பை: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது. குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.மருத்துவமனை நோக்கி...ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சிபாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்

Friday, July 6, 2007

முதல் இந்திய சுதந்திரப் போர்1857;


முதல் இந்திய சுதந்திரப் போர்1857;
வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்
அபூசாலிஹ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.

'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் லி வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.
2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
மன்னர் பகதூர்ஷா
ஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.
முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். இதில் உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. தற்போது முதல் சுதந்திரப் போரின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி போற்றப்பட்டிருக்க வேண்டிய மாவீரர் ஆவார்.
உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.
வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.
உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் (தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் ஈப்ங்ழ்ண்ஸ்ரீள் பக்கம் 49ல்) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
ஷா வலியுல்லாஹ் (1703லி1762)
ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.
திப்பு சுல்தானின் தியாக பூமி
வீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்
1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.
ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786லி1831)
ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.
இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.
முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.
பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.
1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்

இன்னிக்கு என்னா

சென்னைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அமெரிக்க அனு நாசகார கப்பல் சென்னையை விட்டு அகன்றது.நாசகார கப்பலோடு அனுவிஞ்ஞானிகளும் வந்திருக்க கூடும் என உளவுத்துறையினர் ச்ந்தேகம் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் ஆண்டுக்கு முப்பது சதவீதத்தினர் இதய் நோயால் இறந்து வருவதாக தமிழகசுகாரத்துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவில் முப்பது சதவீதத்தினருக்கு இதயம் உள்ளது நிரூபிக்கப்பட்டிருப்பத்தாக குறும்புக்காரர் ஒருவர் கூறூகிறார்.

தமிழகத்தில்பொறியியல் கல்லூரிகளில் புதிதாக மூன்றாயிரம் சீட்கள் உருவாக்கப்படுமென அண்ணா பல்கலைக்கழகதுனை வேந்தர் டி விஸ்வநாதன் தெரிவித்திரிக்கிறார்.



ஒருநாட்டின் மீதோ சமூகத்தின் மீதோ தீவிரவாத முத்திரை குத்துவது விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர் எனப்பிரித்துபார்ப்பது பிரச்சனை தீர்க்க உதவாதுஎன்றார்.இது குறித்து பிரிட்டன் பிரதமரிடம் பேசியதாக வும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.